[0:06]பச்சைமலைத் தொடரில் பரவிக்கிடக்கும் அடர் கானகம் தான் பரம்பு நாடு. அந்நாட்டின் தலைவன் பாரி. வேளிர்குலத்தின் வழித்தோன்றலாதலால் வேள்பாரி என்று அழைக்கப்பட்டான். அவனது புகழ் நிலமெங்கும் பரவி இருந்தது. அவனது வள்ளல் தன்மையை பாணர்கள் திசையெங்கும் பாடினார்கள். பெரும் புலவன் கபிலன் பாண்டி நாட்டுக்கு உட்பட்ட சிற்றரசன் ஒருவனின் மாளிகையில் இரவு கள் உண்டு மகிழ்ந்திருந்தான். அப்பொழுது அவ்வரசன் சொல்கிறான். எல்லா அரசர்களிடமும் பரிசில் பெற்று திரும்பும் பாணர்கள் பாரியிடம் மட்டும்தான் கருணையை பெற்று திரும்புகின்றனர். இது கபிலருக்கு ஏற்புடையதாக இல்லை. பாரி விருந்தினரை நிர்வகிப்பதில் சிறந்தவனாக இருக்கலாம். ஆனால் வள்ளல் தன்மை என்பது நிர்வாக திறமை அல்ல. அது குழந்தையின் குரல் கேட்ட கணத்தில் பால்கசியும் தாயின் மார்பை போன்றது என்று வாதாடுகிறார். ஆனால் அவன் அதனை ஏற்கவில்லை. உரையாடலின் ஒரு கட்டத்தில் பாரியை சோதித்தறிய பரம்பு நாடு நோக்கி நானே செல்கிறேன் என்று சொல்லி புறப்படுகிறார் கபிலர். முன் பின் போகாத அடர் காட்டுக்குள் தன்னன் தனியாக நுழைகிறார். உள்ளே நுழைந்த சிறிது தூரத்திலேயே நீலன் என்ற வீரன் கபிலரோடு இணைகிறான். மூன்றடுக்கு கொண்ட பச்சை மலையில் உள்ள காராமலை, நடுமலை, ஆதிமலை ஆகிய மூன்று மலைகளை கடந்து பாரி இருக்கும் எவ்வியூருக்கு அழைத்து செல்கிறான் நீலன். இந்த நெடுவழிப்பயணம் காடு பற்றியும், இயற்கை பற்றியும், மலை மக்கள் பற்றியும், பாரி பற்றியும் அவரின் சிந்தனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. கபிலர் வந்து கொண்டிருக்கிறார் என அறிந்த பாரி எதிர் வந்து வணங்கி கபிலரை தன் தோளிலேயே வைத்து எவ்வியூருக்கு தூக்கிச் செல்கிறான். கபிலரின் வரவு எவ்வியூரின் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. பரம்பின் ஆசான் தேக்கன், பாரியின் மனைவி ஆதினி, பாரியின் இருமகள்களான அங்கவை, சங்கவை என எல்லோரும் கபிலரின் வரவை கொண்டாடி தீர்க்கின்றனர். அடுத்த சில நாட்களில் பரம்பின் பெருவிழாவான கொற்றவை கூத்து துவங்கியது. சேர, சோழ, பாண்டி மூவேந்தர்களும் எத்தனையோ இனக் குழுக்களை அழித்து தங்கள் ஆட்சி பரப்பை விரிவுபடுத்தியுள்ளனர். அவ்வாறு அழித்தொழிக்கப்பட்டதில் சிலர் பரம்பில் அடைக்கலம் அடைந்தனர். பரம்பு நாடோ அவர்களை தங்களின் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டது. அழித்தொழிக்கப்பட்ட குலங்களின் வழித்தோன்றல்கள் போர் தெய்வமான கொற்றவையின் முன்னால் தங்களின் குல வரலாற்றை சொல்லி அதனை அழித்தொழித்த வேந்தனின் மீது வஞ்சினம் உரைக்கின்றனர். 17 நாள் பெருவிழா இது. கொற்றவை இருக்கும் பெரும் மரப்புதர்க்குள் தெய்வ வாக்கு விளங்கி இருக்கும். அது இறங்கி வந்து இலையில் வைக்கப்பட்ட கனிகளில் ஏதாவது ஒன்றை முதலில் எடுக்கும். அப்படி எடுக்கப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட இனக்குழுக்கள் கொற்றவையின் முன் தாங்கள் அழிக்கப்பட்ட கதைகளை சொல்லி அருள் இறங்கி ஆடுவர். கடைசியாக 17வது நாள் பரம்பின் சார்பில் பாரி களம் இறங்கி ஆடுவான். இத்தனை இனக்குழுக்களை அழித்தொழித்த மூவேந்தர்களின் பகை முடிக்க வஞ்சினம் உரைப்பான். இக்கூத்து முழுவதும் கேட்டறிந்தார் கபிலர். பரம்பு என்பது தனித்த இடமல்ல. வஞ்சிக்கப்பட்ட குலங்கள் அனைத்துக்குமான வாழ்விடம் என்பதும் பரம்பின் குணமே அரவணைப்பதும் அன்பு செலுத்துவதுமாக இருக்கிறது என்பதும் கபிலர் உணர்ந்தார். இதே காலத்தில் பாண்டி பெருவேந்தன் குலசேகர பாண்டியன் மகன் புதிய வெற்பனுக்கு திருமண ஏற்பாடுகள் துவங்கியது. யவனத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே கடல் வணிகம் செழித்து இருந்த காலம் அது. வணிகர்களின் செல்வமும் செல்வாக்கும் வேந்தர்களுக்கு இணையான வலிமை பெற்றிருந்தது. கடல் வணிகர்கள் தங்களுள் ஏற்படுத்திக்கொண்ட சாத்துக்கள் என்ற அமைப்பின் தலைவனாக இருந்தான் பெரு வணிகன் சூழ்கடல் முதுவன். அவனது மகள் பொற்சுவையை புதிய வெற்பனுக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்தனர். மாமதுரை திருமண விழாவுக்கு தயாராகிக் கொண்டிருந்தது. தனது காதலை கண்ணீரை போல் கரைத்துக் கொண்டு மணவிழாவுக்குள் நுழைந்தாள் பேரழகி பொற்சுவை. பரம்பு நாட்டின் மலை அடிவாரம் இருப்பது வெங்கல் நாடு. அந்நாட்டை ஆளும் சிற்றரசர் மையூர் கிளார் பாண்டிய வேந்தனுக்கு மிகவும் விசுவாசமாக நடந்து கொள்பவர். உலகமே போற்றி வியக்கும் பாண்டி இளவரசனின் திருமணத்துக்கு யாரும் தராத சிறந்த பரிசொன்றை தர வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அந்நிலையில் மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஒரு அரிய வகையான உயிரினத்தை உழவன் ஒருவன் மையூர் கிளாரிடம் காட்டுகிறான். பார்க்கவே சற்று அருவருப்பாக இருக்கும். இது என்ன வகையான உயிரினம் என சிந்தித்து கொண்டிருக்கையில் அங்கிருந்த பாணர் கூட்டத்தலைவன் சொல்கிறான், இதுதான் பாரியின் கொற்றவை கூத்தில் குறி சொல்லும் தேவ வாக்கு விலங்கு. மையூர் கிளார் பெருமகிழ்ச்சி அடைந்தார். தனது மகன் இள மரதனின் மூலம் திருமண பரிசாக தேவ வாக்கு விலங்கினை கொடுத்து அனுப்புகிறார். அவ்விலங்கிற்கு ஒரு அதிசய ஆற்றல் உண்டு. அது எல்லா திசையிலும் நடக்கும். ஆனால் உட்காரும் போது வடதிசை நோக்கியே உட்காரும். இவ் அரிய ஆற்றலை கண்டறிந்து பேரரசுக்கு தெரிவிக்கின்றனர். தேவாங்கியின் அரிய ஆற்றல் கண்டு பேரரசர் திகைத்துப் போனார். குறிப்பாக கடல் பயணத்தில் திசை அறியா சூழலில் பல கலங்களை நாம் இழந்து விடுகிறோம். இவ் விலங்கு இருந்தால் கடல் பயணத்தில் எண்ணற்ற நன்மைகள் விளையும். காற்றையும் கடலையும் ஆளும் பெரு வல்லமையை இவ் விலங்கு உருவாக்கும் என்று சொல்லி பெருமகிழ்வு அடைகிறான் குலசேகர பாண்டியன். இவ் விலங்கினை பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி யோசிக்கின்றனர். பரம்பின் இலைத்தழைகளை கூட எடுத்து செல்ல பாரி அனுமதிக்க மாட்டான். அப்படி இருக்க தேவ வாக்கு விலங்கை எப்படி தருவான்? எனவே மாற்று வழியை கண்டறிந்தனர். ஏற்கனவே அடிமை கொள்ளப்பட்ட திரையர் குலத்தை சேர்ந்தவர்கள் மூலம் அவ் விலங்கை கவந்து வர திட்டம் தீட்டப்பட்டது. அடர்காடுகளை தங்களின் வாழ்விடமாக கொண்ட திரையர்கள் மூலம் வகுக்கப்பட்ட திட்டம் தோல்வி அடைந்தது. அம் முயற்சியின் இறுதியில் பாண்டிய நாட்டின் பெரும் துறைமுகமான வைப்பூர் துறைமுகம் தீக்கிரையானது. குலசேகர பாண்டியன் கடும் கோபமுற்றான். பாரியின் புகழும் பரம்பு மலையின் செழிப்பும் எப்பொழுதும் அவனது கண்களை உறுத்தியது. அத்துடன் தேவ வாக்கு விலங்கும் வைப்பூர் துறைமுகம் தீக்கிரையாக்கப்படனதன் காரணமும் இணைந்து கொண்டது. பரம்பின் மீது போர் தொடுப்பது என்று முடிவெடுத்தார் குலசேகர பாண்டியன். ஏற்கனவே தனது தந்தையை கொன்ற வேள்பாரியை அழித்தொழிப்பேன் என்று வஞ்சினம் உரைத்திருந்தான் சேர நாட்டு அரசன் உதியன் சேரல். பொருத்தமான நேரம் பார்த்து அவனது படை ஆயிமலையின் வழியாக பரம்பின் மீது போர் தொடுத்தது. ஆனால் பரம்பின் வீரர்கள் அப் படையெடுப்பினை வெற்றிகரமாக முறியடித்தார்கள். பச்சைமலைத் தொடரில் 14 வேளிர்களின் குலங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் பரம்பு மலை வேளிர்கள். இந்த 14 வேளிர்குலங்களும் தங்களின் விலைமதிப்பற்ற மிக உயர்ந்த செல்வங்களை பாழி நகரில் புதைத்து வைக்கின்றனர். அந்த பாழி நகரினை பாதுகாக்கும் பொறுப்பு பரம்பு மலை வேளிர்க்குரியது. இது காலம் காலமாய் இருந்து வரும் வழக்கம். சோழ பெருவேந்தன் செங்கனச்சோழன் பாழி நகர் செல்வத்தை எடுக்க காடர்களின் துணையோடு முயல்கிறான். வலிமை மிகுந்த யானை படையோடு எழுவனாற்றின் வழி முன்னேறும் சோழப்படையை பாரியின் படை மிக எளிதாக வீழ்த்துகிறது. செங்கனச்சோழன் மயிரிழையில் உயிர் பிழைத்து வெளியேறுகிறான். இந்நிலையில் தான் பாண்டியனின் பெரும்படை பரம்பு மலையின் கிழக்கு பக்க அடிவாரம் வந்து சேர்கிறது. மதிநுட்பம் வாய்ந்த குலசேகர பாண்டியன் இரண்டு திட்டங்களை தீட்டுகிறான். ஒன்று பாரியுடனான போரில் தோல்வியை சந்தித்த சேரன் மற்றும் சோழனை தன்னுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு எக்காரணம் கொண்டும் மலைமீது ஏறி பாரியுடன் போர் தொடுக்க கூடாது. மாறாக பாரியை மலையை விட்டு கீழிறங்கி வரவைக்க வேண்டும். இந்த இரண்டு திட்டங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றினான் குலசேகர பாண்டியன். யவன வணிகத்தின் பெரும் தளபதி ஹிப்பாலஸ் மூலம் சேரன் மற்றும் சோழனுடன் பேசி மூவேந்தர்களின் கூட்டுப்படையை உருவாக்குவதில் வெற்றி பெற்றான். பரம்பின் கீழ்த்திசை காவலனும் அகுதை குலத்தை சேர்ந்த பெரு வீரனுமான நீலனை நயவஞ்சகமாக தாக்குதல் நடத்தி சிறையெடுத்து வந்து விட்டான். நீலனை மீட்க பாரி பரம்பு மலையை விட்டு கீழிறங்கி வந்தே ஆக வேண்டும். இந்நிலையில் கபிலரை தூதனுப்பும் பாரி வரும் முழு நிலவு நாளுக்குள் எதிரிகளை வென்று உன்னை மீட்கிறேன் என்று வாக்களிக்கிறான். மலையை விட்டே கீழிறங்காத பாரியை சமதளத்தில் வைத்து சந்திக்க தயாரானது மூவேந்தர்களின் கூட்டுப்படை. போர்க்களத்துக்குரிய இடமாக தட்டியங்காடு தேர்வு செய்யப்பட்டது. கரையான்களும் ஓனான்களும் மட்டுமே வாழும் பால் நிலத்தில் வரலாறு காணாத போர்க்களம் தயாரானது. 200 வீரர்கள் கொண்ட சேனைக்கு ஒரு சேனை முதலி தலைமை ஏற்பார். 12 சேனை முதலிக்கு ஒரு சேனை வரையர் தலைமை தாங்குவார். இப்படி 60 சேனை வரையன்களும் 720 சேனை முதல்வர்களும் அவர்களுக்கு கீழ் 1,44,000 வீரர்களும் மூவேந்தர்களின் படையில் அணிவகுத்து நின்றனர். இ பெரும் படைக்கு தலைமை தளபதியாக மகாசமந்தன் கருங்கை வாணன் நியமிக்கப்பட்டான். இவற்றில் நான்கில் ஒரு பகுதிக்கும் குறைவான வீரர்களை கொண்டிருந்த பரம்புப்படைக்கு முடியன் தலைமை ஏற்றான். வகுக்கப்பட்ட விதிகளின்படி போரினை வழிநடத்த நிலைமான் கோல் சொல்லிகள் நியமிக்கப்பட்டன. மூவேந்தர்களின் தரப்பில் திசை வேளிரும் பரம்பின் தரப்பில் கபிலரும் இப் பொறுப்பினை ஏற்றனர். தமிழ் நிலத்தின் வரலாறு கண்டிராத பெரும் படையோடு மூவேந்தர்களின் கூட்டுப்படை அணிவகுத்துள்ளது. அதனை எதிர்கொண்டு வீரம் மிக்க தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது பாரியின் பரம்பின் படை. தட்டியங்காட்டில் வெற்றியை நிலை நிறுத்த போவது யார்? மூவேந்தர்களின் கூட்டுப்படையை சின்னன்சிறு பரம்பின் படை வெல்லுமா? பாரி வெல்வானா? வீழ்வானா? தொடரின் முடிவில் அறிவோம்.

வள்ளல் பாரியின் உண்மை வரலாறு ! | History of Tamil King Vel Paari ( Paari Vallal )
Vikatan TV
9m 20s949 words~5 min read
Auto-Generated
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


